Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

உயிரிழை வளர்ச்சிப் படிக்கட்டுக்கள்

உயிரிழை வளர்ச்சிப் படிக்கட்டுக்கள்

உயிரிழை அமைப்பினுடைய ஆரம்ப கட்ட செயற்பாடுகள்

2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எமது உயிரிழை அமைப்பினுடைய ஆரம்ப கட்ட செயற்பாடுகள் தொடர்பாகப் பார்த்தால் ஆரம்பத்தில் எமது நிர்வாக செயற்பாடுகளே அதிகளவில் நடைபெற்றன. அதாவது, எமது அமைப்பிற்கான யாப்பு உருவாக்கம் மற்றும் உயிரிழை அமைப்பிற்கான இலட்சிணை வடிவமைத்தல், அமைப்பிற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் தான் அப்போதைய காலப்பகுதியில் நடைபெற்றது.

இதில் விசேடமாக யாப்பு உருவாக்கம் என்பது அப்போதைய நிர்வாக சபையின் செயலாளராக இருந்த திரு.சுவக்கீன்பிள்ள இருதயராஜா மற்றும் பொருளாளர் திருமதி ராஜீவ் சுவர்ணமுகி ஆகியோர் பல தடவைகள் யாப்பு திருத்தங்கள் தொடர்பாக, பல யாப்புகளை முன்னுதாரணமாக வைத்து எமது அமைப்பிற்கு ஏற்ற வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை உடனுக்குடன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பார்வைக்கு வழங்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் போசகர்கள், பணிப்பாளர்சபை உறுப்பினர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்து செயலாளர் அவர்களினால் அனைவருக்கும் வாசித்துக் காட்டப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் அது அனைத்து உறுப்பினர்களுடைய அங்கீகாரத்துடன் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் எமது அமைப்பு 2011 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக சமூகசேவைகள் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. அதன் பின்னர் ஆரம்பத்தில் எமது உயிரிழை அமைப்பின் செயற்பாடுகள் என்பது மாதாந்த நிர்வாக சபைக் கூட்டங்களைக் கூட்டி எமது அமைப்பின் ஏனைய கட்டமைப்புக்களை கட்டியமைத்தல் மற்றும் பயனாளிகளுடன் எப்படியான செயற்பாடுகளைச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது என்பன தொடர்பான ஆரம்ப கட்ட கூட்டங்கள் நடாத்தப்பட்டு ஆரம்ப நிர்வாக சேவைகள் பலப்படுத்தப்பட்டன.

பின்னர் 2012 ஆம் ஆண்டு எமது உயிரிழை அமைப்பிற்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடு இந்தியாவின் புகழ்பூத்த பட்டிமன்றப் பேச்சாளரான திரு.திண்டுக்கல் லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதனூடாகக் கிடைக்கப்பெற்ற நிதி எமது பயனாளிகளின் மருத்துவ, வாழ்வாதார திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் பின்னர் எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகளுக்கு Handicap International நிறுவனத்தின் உதவியோடு சகபாடி குழு பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. அதாவது, ஒரு முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் தனது காலத்தில் முன்பு எப்படி இருந்தார். ஆனால், காயத்தின் பின்பு எப்படி அவர் அழுத்தப்புண்கள்  மற்றும் முள்ளந்தண்டு போன்றவற்றைப் பராமரிக்க வேண்டும் என்றும் ஒரு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர் தனது சக்கரநாற்காலிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்படி தனது சுய தேவைகளைத் தாமாகப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் மிகவும் தேவையான அடிப்படை வகுப்புக்கள் ஆரம்பத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள எமது பயனாளிகளுக்கு, சகபாடி பயிற்றுவிப்பாளர்களான திரு.சுவக்கீன்பிள்ளை இருதயராஜா, திருமதி.ராஜீவ் சுவர்ணமுகி, செல்வி.ரத்தினசிங்கம் துஷ்யந்தினி ஆகியோரால் நடாத்தப்பட்டன.

ஆரம்பத்தில் எமக்கான அலுவலகம் இல்லாதபடியால் வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்தில் ஒரு அறையில் எமக்கான இடம் ஒதுக்கித் தரப்பட்டு அங்கு வைத்தே நாம் எமது ஆரம்ப கட்ட வேலைகளைச் செய்து வந்தோம்.

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு எமது அமைப்பின் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு எமது பயனாளிகளுக்கு IMHO நிறுவனத்தால் 30 முச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த செயற்பாடுகள் IMHO அமைப்பின் முழுமையான நிதி அனுசரணையோடு என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணரான ஞானசேகரம் ஐயா அவர்களின் நேரடி வழிநடத்தலின் 2012 தொடங்கி 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் எமது அமைப்பின் பயனாளிகள் 30 பேருக்கான முச்சக்கரவண்டிகள் இலவலசமாக வழங்கி வைக்கப்பட்டன.இந்த செயற்பாட்டிற்கு வைத்தியர் ஞானசேகரம் ஐயாவுடன் இணைந்து திரு.சுவக்கீன்பிள்ளை இருதயராஜா அவர்களும் கடமையாற்றியிருந்தார்.

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஊதா அமைப்பினர் எமது உயிரிழை அமைப்போடு இணைந்து எமது பயனாளிகளுக்கான மாதாந்த மருத்துவ உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தினை வழங்கினர். 05 பேருடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 114 பேருக்கு மாதம் 5000.00 ரூபா வீதம் கொடுத்து வருகிறார்கள்.

மாதாந்த கொடுப்பனவு விவரம்

  1. ஊதா –                                   114 பயனாளிகள்
  2. மக்கள் நலன் காப்பகம் – 23 பயனாளிகள்
  3. நாகபூசனி அம்மன் –         24 பயனாளிகள்
  4. உலக சிறுவர் நலன் காப்பகம்
  5. கிருஸ்துராசா பியூலா
  6. தனிநபர் உறவுகள்

 2015 ஆம் ஆண்டு எமக்கான ஒரு அலுவலகத்தை மாதாந்த வாடகை செலுத்தி வவுனியா வேப்பங்குளத்தில் ஆரம்பித்து வைத்தோம். எமது அலுவலகம்  வேப்பங்குளத்தில் இயங்குகின்ற காலப்பகுதியிலேயே முதன்முதலில் எமது பயனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்தோம். (2015,டிசம்பர் -03). அதன் பின்னர் அங்கிருந்து எமது உயிரிழை அமைப்பின் செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி அடைந்து எமது பயனாளிகளின் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்து கொடுக்கக் கூடிய வகையில் செயற்படத் தொடங்கியது.

இந்த நேரத்தில் தான் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஐயா ஊடாக Lebara Foundation ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் எமது நிர்வாக சபையினரை யாழ்ப்பாணம் Tilko Hotel இல் வைத்து சந்தித்தித்தார். எமது உயிரிழை அமைப்பு என்றால் என்ன? எமது தேவைகள் என்ன? எமது அமைப்பின் பயனாளிகளின் விளக்கங்கள் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலுள்ள நண்பர்கள் விடுதியில் வைத்து திரு.கந்தையா பாஸ்கரன் மற்றும் எமது அமைப்பின் பணிப்பாளர் சபையினர், நிர்வாக சபையினர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்ட மிகப்பெரிய ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஏற்கனவே ஊதா அமைப்பினரால் வழங்கப்பட்டு வருகின்ற 5,000.00 ரூபா உதவித் தொகையுடன் திரு.கந்தையா பாஸ்கரன் ஊடாக 5,000.00 ரூபா சேர்க்கப்பட்டு மிகுதியாக இருக்கின்ற அனைவரையும் இணைத்து அனைவருக்கும் ரூபா 10,000.00 வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எமது பயனாளிகள் தங்களது மருத்துவம், வாழ்வாதாரம் போன்றவற்றினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வளர்ந்து சென்றது.

இதன் பின்னர் நாம் வவுனியாவில் இருந்த எமது அலுவலகத்தினை, மாங்குளம் பிரதேசத்திலுள்ள ஒரு வாடகை கட்டடத்திற்கு இடம்மாற்றி நடாத்தி வந்தோம். இந்த நேரத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா அவர்களிடம் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினால் எமக்கு மாங்குளம் பிரதேசத்தில் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டது.

மாங்குளம் பிரதேசத்தில் எமது உயிரிழை அலுவலகத்துடன் கூடிய தொழிற்பயிற்சி கட்டடம் ஒன்றினை அமைக்க Brampton Tamil Association முழுமையான நிதியினை எமக்கு வழங்கி வைத்தனர். அந்த காலப்பகுதியில் ஊதா அமைப்பினரால் எமது பயனாளிகளுக்கு ஒரு தொகை சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. 30-03-2017 அன்று எமக்கான நிரந்தர அலுவலகம் மாங்குளம் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் எமது அலுவலக செயற்பாடுகளும் எமது அமைப்பின் செயற்பாடுகளும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றது.

எமது பயனாளிகளின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட விளையாட்டுத் திறனை வளரத்துக் கொள்வதற்காகவும் மற்றும் ஏனைய எமது போக்குவரத்து அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காகவும் எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க IBC தமிழ் நிறுவன தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களினால் 2020 ஆம் ஆண்டு சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்தன. பின்னர் அவ் வேலைத்திட்டத்தினை அபிவிருத்திக்காக உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) பொறுப்பெடுத்து சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மைதான வேலைகளைப் பூரணப்படுத்தி எமக்கு வழங்கினார்கள்.

அதற்குப் பின் அன்னைமடி அமைப்பினருக்கும் எமக்குமான ஒரு உறவு ஏற்பட்டு அன்னைமடி அமைப்பின் ஊடாக எமக்கான நிரந்தர வருமானத்தை மேம்படுத்தும் நோக்கோடு உணவகம் ஒன்று அமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்தோம். புதிய காணி ஒன்று ஒட்டுசுட்டான் பிரதேச்செயலகத்தினால் எமது உயிரிழை அமைப்பின் அலுவலகத்துக்கு அருகாமையில்  வழங்கப்பட்டது. அக் காணியில் மிக வேகமான முறையில் நடைபெற்ற இச்செயற்பாடு கொரோனா தாக்கத்தினால் தடைப்பட்டது. அதன் முழுமையான வேலைகள் முடியாமல் இருந்தமையால் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதே போன்று எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளின் தேவைகளுக்காக சமையலறை கூடம் ஒன்று, தீபன் விளையாட்டுக் கழகம் – கனடா அமைப்பினரால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2017-10-08 அன்று திறந்து வைக்கப்பட்டது.

எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளின் மருத்துவ தேவைகளுக்காக, மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி பாதுகாக்கவும் எமது பயனாளிகளைப் பார்வையிட வரும் மருத்துவர்கள் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஒரு இடம் இல்லாத காரணத்தால் IMHO நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகைக்கு அமைவாக மருத்துவ அறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2019-02-15 அன்று DR.ராஜம் தெய்வேந்திரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

எமது உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் அனைவரும் சக்கரநாற்காலி பயனாளிகள். இவர்கள் அனைவரும் தங்களது இறுதிக்காலம் வரைக்கும் சக்கரநாற்காலியின் உதவியுடனேயே தங்களது காலத்தைக் கடப்பவர்கள். ஆகவே, இவர்களது சக்கரநாற்காலியானது அடிக்கடி பழுதடைவதால் அவற்றைத் திருத்தி மீளப் பயன்படுத்துவதற்கான ஒரு இடம் இல்லாத காரணத்தால் Austarlian Tamil Community ஊடாக இதற்கான நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து 2019-10-30 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் Austarlian Tamil Community அமைப்பால் முதல் கட்டமாக ஒருவருக்கு 50,000/= வீதம், 20 பயனாளிகளுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு கடனாக 2020-01-15 அன்று வழங்கப்பட்டது. இது ஒரு மீள் சுழற்சியான வட்டியில்லா கடனுதவி. இக்கடனை எமது பயனாளிகள் மாதாந்தம் 2,500/= வீதம் மீள செலுத்த வேண்டும். அதில் பெறப்படும் தொகையில் மீளவும் புதிய பயனாளிக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்படும். இதே போன்று SLCDF, PALMERA ஆகிய நிறுவனங்கள் இணைந்து மீள் சுழற்சி முறையிலான கடன் திட்டம் ஒன்றினை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

எமது பயனாளிகளின் கணினி அறிவை விருத்தி செய்யும்பொருட்டு மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைக் கற்பித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு 24-08-2020 அன்று Wheel Care – German அமைப்பினரால் (திரு.யோகி) ஒரு செயற்றிட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கணினிகளைக் கொள்வனவு செய்து வழங்கியதோடு எமது பயனாளிகளுக்கான கணினிப் பயிற்சிகளை வழங்கினர். எமது உயிரிழை அமைப்பின் பணிகளை கணினி மயப்படுத்தி இலகுவாகவும் துரிதமாகவும் துல்லியமாகவும் பணியாற்றும் நோக்கோடு மென்பொருள் ஒன்றை தயாரித்து வழங்கியதோடு மேலும் மென்பொருட்களை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு எமக்கான இணையத்தளம் உருவாக்கத்துக்கும் பயன்பாட்டுக்கும் தொடர்ந்து உதவி புரிந்ததோடு தொடர்ந்தும் எமது அமைப்பின் பணிகளைக் கணினி மயப்படுத்தும் திட்டத்துக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்கிவருகின்றனர்.

மேலும், சிரட்டைக் கைத்தொழில் பயிற்சிப் பட்டறைக்கு ஒழுங்கு செய்ததோடு சிரட்டைக் கைத்தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் கொள்வனவு செய்து வழங்கியதோடு அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

எமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு எமது பயனாளிகளுக்கான சுழற்சி முறையிலான வாழ்வாதார கடன்திட்டம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் 2021-02-22 அன்று அரைக்கும் ஆலை ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதில் அரிசிமா தயாரித்து அதை எமது உயிரிழை அமைப்பின் பெயரில் பொதி செய்து விற்பனை செய்து வந்தோம். இதனால் எமது வருமானம் மேம்பட்டுக்கொண்டிருந்தது. இந்த வேளையில் கொரோனாவின் தாக்கத்தால் இச்செயற்பாடுகள் பின்னடைந்து சென்றது. இதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்த அரைக்கும் ஆலை செயற்றிட்டத்தைத் தொடர்ச்சியாகச் செயற்படுத்த முடியாமல் போனது.

இதே போன்று இன்னுமொரு வாழ்வாதார செயற்றிட்டமாகக் கூட்டுப்பண்ணை ஒன்று அமைப்பதற்காக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தால் 05 ஏக்கர் காணி பெறப்பட்டு இதில் ஆடுகள், மாடுகள், கோழி வளர்ப்பு மற்றும் மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டு இதனூடாக எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றது. இதற்கான ஆரம்ப வேலைகளுக்கான நிதியினை Australian Tamil Community அமைப்பினரே வழங்கியிருந்தனர். அதன் பின்னர் கனடா மண்வாசனை அமைப்பினரே பண்ணைச் செயற்றிட்டத்திற்கான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

IBC தமிழ் நடாத்திய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட சீட்டிலுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற 500,000/= பணத்தைப் பயன்படுத்தி சிறு வியாபாரத்துக்கான கடை ஒன்று கட்டப்பட்டது.

ஈசன் அண்ணா அவர்களினால் எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்குக் கோழி வளர்ப்பிற்காக கோழிக்கூடு அமைத்துத் தரப்பட்டது.

வடமராட்சி பழைய மாணவர்களால் ஒரு தொகுதி சக்கரநாற்காலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

யாழ் நெல்மணி அமைப்பினர் ஒருத்தொகுதி சக்கரநாற்காலிகள் அன்பளிப்பு செய்தனர்.

2017 ஆம் ஆண்டு லண்டன் ஊதா அமைப்பினர் உயிரிழை பயனாளிகளுக்கான ஒரு தொகுதி சக்கரநாற்காலிகள், வோக்கர், ஊன்றுகோல்கள் என்பன அனுப்பி வைத்திருந்தனர்.

2017 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா ரோட்டறிக் கிளப் ஊடாக எங்களுக்கு ஒரு தொகுதி கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டு எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு முதன்முதலாக யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக உடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தந்து சமையல் கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின் அவர்கள் தொடர்ந்து எம்மோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

27/09/2023 அன்று அவுஸ்ரேலியா தமிழ் யூனியன் அமைப்பினர் உயிரிழை பயனாளிகளின் தேவை அறிந்து எங்களது மருத்துவம் மற்றும் ஏனைய பயன்பாட்டிற்காக  அம்புலன்ஸ் வாகனம் ஒன்று கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கிவைத்துள்ளனர்.

உயிரிழை அமைப்பிற்கு நிரந்தர வருமானம் ஒன்றை பெறுவதற்காக தொழில் முயற்சி ஒன்றை உருவாக்கும் நோக்கோடு அரைக்கும் ஆலை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் 2023 பத்தாம் மாதம் தொடங்கப்பட்டு நடந்து  வருகின்றது.

2023 ஆம் ஆண்டு எமது பயனாளிகளின் விளையாட்டுத் திறனையும் உடல் உள ஆரோக்கியத்தையும் பேணும் முகமாகவும் திறமையான வீரர்களை. மாகாண, தேசிய மட்டத்துக்கு கொண்டு சென்று அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கோடும் மாவட்ட மட்டத்தில் உயிரிழை விளையாட்டுக்கழகம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக விளையாட்டுக்கழகத்திற்கான நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *