New SpiceLand அறக்கட்டளை உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
மண்வாசனை கனடா அமைப்பானது, எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பிற்கு கடந்த காலம் முதல் இன்றுவரை இடையறாது ஆதரவு வழங்கி வரும் ஒரு முன்னோடி மனிதநேய அமைப்பாக திகழ்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை ஆழமாக உணர்ந்து, அவர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக செயற்பட்டு வருவது மண்வாசனை அமைப்பின் தனித்துவமான சேவையாகும்.
இந்த மனிதநேயச் சேவையின் முக்கிய அங்கமாக, New SpiceLand அறக்கட்டளை, கடந்த ஒரு வருட காலமாக மண்வாசனை கனடா அமைப்பின் ஊடாக எமது உயிரிழை பராமரிப்பு இல்லத்தில் வாழ்ந்து வரும் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்ற பயனாளிகளின் நலனுக்காக தொடர்ச்சியாக உதவி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த உதவித் தொடரின் நீட்சியாக, இவ்வாண்டும் 2026 ஆம் ஆண்டு தை மாதத்திற்கான எமது பராமரிப்பு இல்லப் பயனாளிகளின் உலர் உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் மரக்கறி உணவு வகைகள் கொள்வனவு செய்வதற்காக ரூபா 3,93,720.00
(மூன்று இலட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து எழுநூற்று இருபது) நிதியினை
03.01.2026 அன்று மண்வாசனை கனடா அமைப்பின் ஊடாக New SpiceLand அறக்கட்டளை அன்பளிப்பாக வழங்கியிருந்தது.
இந்த நிதி உதவியானது மருத்துவம் பெற்று வரும் எமது பயனாளிகளின் அன்றாட உணவுத் தேவைகள் மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய பெரிதும் துணையாக அமைந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் இந்த மனிதநேய உதவி, இவ்வாண்டும் தடையின்றி தொடர்ந்தமை எமது நிறுவனத்திற்கு பெரும் நம்பிக்கையையும் மன உறுதியையும் அளித்துள்ளது.
எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பானது, பயனாளிகளின் பராமரிப்பு, வாழ்வாதார தேவைகள் மற்றும் அடிப்படை நலன்களை நிறைவேற்ற தொடர்ச்சியான ஆதரவுகளை பெரிதும் நம்பி இயங்கும் ஒரு சேவை அமைப்பாகும்.
அந்த வகையில், கடந்த ஒரு வருட காலமாக உதவி செய்து வரும் New SpiceLand அறக்கட்டளை, எதிர்காலத்திலும் மண்வாசனை கனடா அமைப்பின் ஊடாக எமது உயிரிழை அமைப்புடன் இணைந்து தொடர்ந்து மனிதநேய உதவிகளை வழங்கி வர வேண்டும் என்பதை இவ்வறிக்கையின் மூலம் பணிவுடன் வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறோம்.
இந்நன்னாளில், தொடர்ச்சியாக உதவி வழங்கி வரும் New SpiceLand அறக்கட்டளையினருக்கும்,
New SpiceLand அமைப்பின் சார்பில் உறுதுணையாக இருந்து செயல்பட்ட சுரேஷ் அண்ணாவிற்கும், வழிகாட்டி நெறிப்படுத்திய சந்திரபோஸ் அண்ணாவிற்கும், மேலும் இவ்வுதவிகளை ஒருங்கிணைத்து எமது நிறுவனத்திற்கு கிடைக்கச் செய்து வரும் மண்வாசனை கனடா அமைப்பினருக்கும்,
எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மனிதநேய நற்சேவை எதிர்காலத்திலும் எந்த தடையுமின்றி தொடர்ந்து வளர்ந்து,மண்வாசனை கனடா அமைப்பும் New SpiceLand அறக்கட்டளையும் இணைந்து எமது உயிரிழை நிறுவனத்திற்கு தொடர்ச்சியான ஆதரவுகளை வழங்கி வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இவ்வறிக்கையை நிறைவு செய்கிறோம்.
-நன்றி-
உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு
மாங்குளம்.
