Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

அரைக்கும் ஆலை

எமது அமைப்பின் அனைத்து செயற்றிட்டங்களுக்கான நிதி வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் உறவுகள் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊடாகக் கிடைக்கப்பெறுகின்றது. நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் நிதியினைச் சேகரித்து எமது ஒவ்வொரு செயற்றிட்டத்தையும் செயற்படுத்தி எமது பயனாளிகளிக்கான தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். இந்த நடைமுறையில் நாம் தொடர்ந்து செயற்படுவது எமக்குப் பெரிய சவாலான விடயமாகும். அவற்றை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் வகையில் எமது அமைப்பின் தேவைகளுக்காக தொழில் முயற்சி ஒன்றினை மேற்கொண்டு அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு மா அரைக்கும் ஆலை ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த செயற்றிட்டத்திற்கான நிதிப் பங்களிப்பினை பேராசிரியர் செல்வநாதன் (பிறிஸ்பேண்) அவர்களின் ஒழுங்கமைப்பில் Tamil Cultural and Welfare Association (Queensland – Australia) அமைப்பு வழங்கியது.

ஆரம்பத்தில் எமக்குப் பல சவால்கள் இருந்தன. இதற்கான மில் வசதிகள் எம்மிடம் இல்லை. அத்தோடு, அரிசி மா மற்றும் உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்தல், விளம்பரப்படுத்தல் போன்றன எமக்கு பெரிய சவாலாக இருந்தன. பின்னர் பல கலந்துரையாடல்களின் முடிவாக ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் மில் ஒன்றினை வாடகைக்குப் பெற்று அதில் எமது உற்பத்திகளைச் செய்யத் தொடங்கி பின்னர் படிப்படியாக எமது செயற்றிட்டத்தை விரிவுபடுத்தலாம் என்ற நோக்குடன் கிளிநொச்சி செல்வாநகர் கிராம அபிவிருத்திச் சங்கம் தமது பயன்பாட்டில் வைத்திருந்த மில்லினை எமக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க முன்வந்ததையடுத்து 20-11-2021 அன்று ஒரு வருடத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மாதம் 6000/= ரூபாய் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பமானது. புதிதாக 2 அரிசி மா அரைக்கும் இயந்திரங்கள் அங்கே பொருத்தப்பட்டு அதற்கான வேலைகள் சீரான முறையில் நடந்துகொண்டிருந்தன. இவற்றை சந்தைப்படுத்த வாகன வசதிகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்தந்த ஆண்டு நடைமுறையில் உள்ள நிர்வாகசபை உறுப்பினர்கள் தங்களது முச்சக்கரவண்டியில் சென்று தான் இந்த செயற்றிட்டத்தை பலத்த சிரமங்களுக்கு மத்தியில் செயற்படுத்தி வந்தனர். இத்திட்டமானது ஓரளவுக்கு நடைமுறைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் உலகெங்கும் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு எமது அரைக்கும் ஆலையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  பின்னர் 2022 ஆம் ஆண்டு 06 ஆம் மாதம் மீளவும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு தற்போது வரை இவ் அரிசி ஆலை இயங்கிக்கொண்டிருக்கின்றது.

ஆனாலும், இச்செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் பல அசௌகரியங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதுள்ளது. காரணம், எமது நாட்டில் ஒரு சிறந்த பொருளாதார நிலைதன்மை இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற விலை ஏற்ற இறக்கம் எமது உற்பத்திகளிலும் அதன் சந்தைப்படுத்தலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மற்றும் எமக்கு தற்போதும் பெரும் சவாலாக இருப்பது எமது இந்த அரைக்கும் ஆலைக்கான ஒரு வாகனம் இல்லாமை ஆகும். எமக்கு அரிசி கொள்வனவு செய்து அதனை அரிசி மாவாக விற்பனைக்கு கொண்டு சென்று கடைகளுக்கு விநியோகிப்பது  பெரும் சிரமமாகவுள்ளது. இதனால் எமது சந்தைப்படுத்தலும் ஒரு சிறிய வட்டத்துக்குள் முடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, எமது இந்த அரைக்கும் ஆலைக்கு ஒரு வாகனம் என்பது மிகவும் இன்றியமையாததாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *