Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

எம்மை பற்றி

உயிரிழை அமைப்பு

உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். இவ்வமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களே. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர், எமது நாட்டில் ஏற்பட்ட பாரிய யுத்தத்தின் போதும் பெருமளவானோர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் இறுதியாக நடந்த யுத்தத்திற்கு பிறகு (2009) இன்னும் பலர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாதவர்களாக இடைத்தங்கல் முகாம்களிலும், வைத்தியசாலைகளிலும் தங்கியிருந்தனர். அந்த காலப்பகுதியில் தங்களை சரியாகப் பராமரித்துக் கொள்ள முடியாமலும், சில அடிப்படை தேவைகள் இல்லாமலும், அழுத்தப்புண்கள் காரணமாகவும் பலர் இறந்தனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் தங்களது குடும்ப வாழ்வாரத்தை மற்றும் எதிர்காலத்தை எண்ணி மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருத்தனர். திருமணமாகிய பின்னர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்தை எண்ணி வருந்தியவர்களாக, “எங்களது இந்த இருளடைந்த வாழ்க்கையில் ஒரு ஒளி தோன்றாதா?” என்ற கவலையுடன் இருந்தனர்.

இந்த நேரத்தில் தான் 2010ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதனூடாக எமது பயனாளிகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டு அதன் பிரகாரம் உருப்பெற்றதே  எமது இந்த ‘’உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு’’ இந்த உயிரிழை அமைப்பினை உருவாக்குவதற்காக பல கட்டமாக சந்திப்புக்கள் நடைபெற்றன. இதில் மருத்துவர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தவர்கள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மனநல வைத்திய நிபுணர் திரு.சிவதாஸ் ஐயா, மனநல வைத்தியர் திரு.சுதாகரன் ஐயா, மாவ‍ட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்தர் திரு.ஸ்ரீனிவாசன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி.நந்தினி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வசந்தரூபன் மற்றும் திரு.சு.இருதயராஜா ஆகியோருடன் HANDICAP INTERNATIONAL வவுனியா திட்ட இணைப்பாளர் திரு.வி.பிறேம்குமார், திரு.Dr.மகேந்திரன் RDHS வவுனியா ஆகியோர் இணைந்து ஆரம்ப கட்ட உருவாக்கத்திற்காக தங்களது பங்களிப்பை வழங்கிருந்தனர். எமது உயிரிழை அமைப்பானது ஏனைய மாற்றுத் திறனாளிகளை விட, ஏனைய மாற்றுத் திறனாளிகளின் அமைப்புகளை விட வித்தியாசமானது. எமது அமைப்பின் பயனாளிகள் யாவரும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்.

ஏனைய மாற்றுத்திறனாளிகளைப் போல இல்லாமல் இடுப்புக்கு கீழேயும் மற்றும் கழுத்துக்கு கீழேயும் பாதிக்கப்பட்டவர்கள். கடைசிக் காலம் வரைக்கும் இன்னொருவரில் தங்கி வாழ்பவர்களாகவே எமது பயனாளிகள் இருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் எல்லோரும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதிலும் விஷேடமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள் எமது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே தான் எமது உயிரிழை பயனாளிகள் ஏனைய மாற்றுத்திறனாளிகளை விட வித்தியாசமானவர்கள்.

எமது அமைப்பின் ஸ்தாபக போசகராக இருக்கின்ற அன்பிற்குரிய மனநல வைத்திய நிபுனர் திரு.சி.சிவதாஸ் ஐயா அவர்களே எமது உயிரிழை அமைப்பின் உருவாக்கத்திற்கு ஆணிவேராக  இருந்து , இந்த அமைப்பினை உருவாக்கி, இந்த அமைப்பிற்கான பெயர் மற்றும் இலட்சினைகளை வடிவமைத்து இன்று வரைக்கும் எமது அமைப்பின் நல் வளர்ச்சிக்காக எமது அமைப்பினை நல்வழிப்படுத்தி வருகின்றனர்

இவரோடு சேர்ந்து பணிப்பாளர் சபை உறுப்பினர்களான மனநல வைத்தியர் திரு.சுதாகரன் ஐயா, சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.ஸ்ரீனிவாசன் ஐயா, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வசந்தரூபன் ஆகியோரும் சிறப்பான முறையில் எமது உயிரிழை அமைப்பினை வழி நடத்தி வருகின்றனர்.

அதே போன்று எமது உயிரிழை அமைப்பின் நிர்வாக சபையில் உள்ளவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்க். தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள். எமது நோக்கு இலக்காக எமது பயனாளிகளின் கல்வி, வாழ்வாதாரம், போக்குவரத்து மற்றும் மருத்துவம் ஆகியவற்றை  நோக்காக கொண்டு மிகவும் ஒரு நேர்த்தியான அமைப்பாகவும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் எமது அமைப்பு உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்டு புலம் பெயர் தேசத்தில் வாழும் நல்லுள்ளங்களின் அன்பு மற்றும் ஆதரவு அனுசரணையோடு இயங்கி வருகின்ற ஓர் அமைப்பாகும்.