உயிரிழை பண்ணை ஆரம்பிக்கப்பட்டது

உயிரிழை அமைப்பானது யுத்தம், விபத்து மற்றும் ஏனைய காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற 250 பயனாளிகளை இணைத்து இயங்கிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு இவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். இவர்களது குடும்ப வாழ்வாதாரம் என்பது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. காரணம், உழைக்கும் குடும்பத் தலைவன், மருத்துவ வசதி இன்றி படுக்கையில் அழுத்தப்புண்களுடன் இருக்கின்றார். பிள்ளைகளின் கல்விச் செலவிற்கு, நாளாந்த உணவு தேவைக்குக் கூட வருமானம் இன்றி மிகவும் வறுமையான நிலையில் உள்ளனர். அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, உயிரிழை அமைப்பானது, இயன்றளவு ஓரளவேனும் மருத்துவ உதவி, பிள்ளைகளின் கல்விச் செலவு, மாதாந்த கொடுப்பனவு போன்றவற்றை வழங்குவதோடு ஏனைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றோம். இதற்காக, எமது புலம்பெயர் உறவுகளையே நம்பி, நல்லுள்ளங்கொண்ட உறவுகளின் உதவியுடன் இவ்வாறான தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். ஆனாலும், போதிய அளவு அனைத்துப் பயனாளிகளுக்கும் செய்வது என்பது கடினமான செயற்பாடாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உயிரிழை அமைப்புக்கான நிரந்தர வருமானத்தைப் பெறக்கூடியவாறு ஒரு தொழில் முயற்சியாக 15-01-2021 அன்று எமது ஒருங்கிணைந்த பண்ணைச் செயற்றிட்டத்தை ஆரம்பித்தோம். அரசாங்கத்திடமிருந்து பெற்ற 5 ஏக்கர் காணியில் தோட்டம், கால்நடை வளர்ப்பு, நீண்டகாலப் பயிர்ச்செய்கை மற்றும் உள்ளூர் உற்பத்திகள் போன்றவற்றைச் செய்து அதனூடாகப் பெறும் இலாபத்தை எமது பயனாளிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எமது உயிரிழையின் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நிதிப் பங்களிப்பாக Tamil Community Empowerment ஊடாக வழங்கப்பட்ட நிதியில் காணி துப்பரவு, வேலி, கிணறு அமைத்தல் போன்றவை செய்யப்பட்டன. அதற்குப் பின் கனடா CRDA மண்வாசனை அமைப்பினர் பண்ணையில் மாட்டுக்கொட்டகை, ஆட்டுக்கொட்டகை அமைத்துத் தந்ததோடு ஆடுகள், மாடுகள், கோழிகள் என்பவற்றைப் பெற்றுத் தந்துள்ளனர். தொடர்ந்தும் பண்ணைக்கான அபிவிருத்தி வேலைகளுக்கு உதவிபுரிந்து வருகின்றனர். கனடாவில் வசிக்கின்ற திரு. எடிசன் அவர்கள் மண்வாசனை அமைப்பு ஊடாக எமது பண்ணையில் தனது நிதிப்பங்களிப்பில் இரண்டு பெரிய கோழிக்கூடுகள் அமைத்துத் தந்துள்ளார். இவரும் மண்வாசனை அமைப்பின் ஊடாக உதவி செய்து வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற நல்லுள்ளங்கொண்ட உறவுகள், தங்களின் தாய், தந்தையர்களின் நினைவுநாளை முன்னிட்டும் தங்கள் பிள்ளைகளின் பிறந்த நாளினை முன்னிட்டும் பண்ணைக்கான ஆடு, மாடு, கோழிகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.





